Thursday 27 May, 2010

இது எங்கள் கோடை


ஏப்ரல் மாதம் வரை
எங்கள் வீட்டில் நிலவிய வெப்பம்
மே மாதத்தில்
காணாமல் போனது 

வீடெங்கும் அழகு
நாள் எல்லாம் இனிமை
மின்வெட்டு என்பதை
நாங்கள் உணர்வதே இல்லை

அங்கங்கே குவிந்து கிடக்கும்
புத்தகங்களும் உடைகளும்
தரை முழுவதும் பரவிக்கிடக்கும்
தலை முடிகளும்
அழகாக்குகின்றன
எங்கள் வீட்டை

படுக்கைகளில் பரப்பப்பட்ட
சுடிதார்களும் அணிகலன்களும்
இடம் மாற்றி வைக்கப்பட்ட
செல்போன் சார்ஜர்களும்
மூலையில் கிடக்கும்
தொலைக்காட்சி ரிமோட்டும்
ஏனோ எரிச்சல் தருவதில்லை

குளியலறைகளில் புதிய வாசனைகள்
கண்ணாடி முன்பு
விதவிதமான டியூபுகள் கிரீம்கள்
காணமல் போன என் சீப்பு
இதெல்லாம் என் முகத்தில்
உண்டாக்கும் புன்னகைகள்

நாள்முழுதும் அலறும்
செல்போன் பாடல்கள்
நள்ளிரவு வரை
அம்மாவுடன் படுத்துக்கொண்டு
குசுகுசுக்கும் குரல் ஓசைகள்
எனக்கு தாலாட்டு போலவே
கேட்கின்றன

ஹாஸ்டலில் இருக்கும்
உங்கள் மகள்கள்
வீடு வந்தால்
உங்களுக்கும்
கோடை சுகம்தான்.

யூத்புல் விகடனில் வெளிவந்த என் கவிதை
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem270510.asp

Friday 14 May, 2010

இது எங்கள் மதுரை

நதிக்கரை நகரமெல்லாம்
நாகரிகத் தொட்டில் என்று
மதுரையைப் பார்க்காமல்
மனம்போலச் சொன்னது யார்?

துகிலுரிந்த திரௌபதி போல்
மணல் இழந்த வைகை நதிப்
பரப்பெல்லாம் குப்பை
பரந்தோடும் சாக்கடைகள்

பக்தர் குறைதீர்க்க
மலை இறங்கி வரும் எங்கள்
அழகர்க்கும் போர்வெல் நீர்
ஆறாகும் தலையெழுத்து

அன்னை மீனாட்சி
ஆட்சி செய்யும் மாநகரில்
தெருவெங்கும் பிச்சைகேட்கும்
கைக்குழந்தைத் தாய்மார்கள்

புத்தி இழந்தவர்கள்
போதை வசப்பட்டவர்கள்
சித்தம் கலங்கித்
திரிகின்ற தெருக்கள் பல

உணவென்ற பேரில்
விஷம் போடும் உணவகங்கள்
உண்டபின் பிழைக்க
உண்பவர்கள் சொக்கரில்லை

வீடு வந்து சேரும் முன்பு
வீடு பேறு தந்து விட
போட்டியிடும் ஷேர் ஆட்டோ
யம தூதர் வாகனமாம்

சொக்கா, எமைக் காக்க
நீ மீண்டும் வர வேண்டும்
சுந்தரேசா கண் திறப்பாய்
தாமதித்தால் மதுரைக்கு

நகரம் என்ற பேர் போகும்
நரகம் என்ற பேராகும்
கடல் கொள்ளாமலே
கடம்பவனம் மறைந்து விடும்
*

யூத்புல் விகடனில் வந்த கவிதை!!
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem110510.ஆசப்

என்னை எழுதச் சொல்லி ஊக்குவித்த தேனம்மைக்கு நன்றி

Saturday 1 May, 2010

இது எங்கள் பள்ளிக்கூடம்!

எங்கள் வகுப்பறை இருந்த இடத்தில்
கடைகள் கட்டப்பட்டு விட்டன

நாங்கள் ஒளிந்து விளையாடிய
கருவேல மரங்கள் நிறைந்த
விளையாட்டு திடல்
சோதனைச்சாலையாக மாறி விட்டது

நாங்கள் மரத்துக் கபடி விளையாடிய
வேப்ப மரங்கள் வெட்டப்பட்டு
சைக்கிள் ஸ்டாண்ட் ஆகிவிட்டது

எங்கள் பள்ளியில் மதிய உணவு சமைத்த
முனியம்மாவின் மகன்
எங்கள் வகுப்புத்தோழன்
சின்னராசு மட்டும்
பள்ளி வாசலில்
ஐஸ் விற்றுக்கொண்டிருக்கிறான்

மண்டையன் என்றழைக்கப்படும் ராயன்
ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறான்

எங்கள் வகுப்பின்
முதல் மதிப்பெண் பெற்ற சண்முகம்
நாற்பதெட்டு வயதிலும்
கையில் மஞ்சள் பையோடு
பை நிறைய மதிப்பெண் சான்றுகளோடு
காலில் செருப்பில்லாமல்
எங்கெங்கோ
அலைந்து கொண்டிருக்கிறான்

யூத்புல் விகடனில் வெளிவந்த என் கவிதை!!!

http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem290410.asp