Saturday 1 May, 2010

இது எங்கள் பள்ளிக்கூடம்!

எங்கள் வகுப்பறை இருந்த இடத்தில்
கடைகள் கட்டப்பட்டு விட்டன

நாங்கள் ஒளிந்து விளையாடிய
கருவேல மரங்கள் நிறைந்த
விளையாட்டு திடல்
சோதனைச்சாலையாக மாறி விட்டது

நாங்கள் மரத்துக் கபடி விளையாடிய
வேப்ப மரங்கள் வெட்டப்பட்டு
சைக்கிள் ஸ்டாண்ட் ஆகிவிட்டது

எங்கள் பள்ளியில் மதிய உணவு சமைத்த
முனியம்மாவின் மகன்
எங்கள் வகுப்புத்தோழன்
சின்னராசு மட்டும்
பள்ளி வாசலில்
ஐஸ் விற்றுக்கொண்டிருக்கிறான்

மண்டையன் என்றழைக்கப்படும் ராயன்
ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறான்

எங்கள் வகுப்பின்
முதல் மதிப்பெண் பெற்ற சண்முகம்
நாற்பதெட்டு வயதிலும்
கையில் மஞ்சள் பையோடு
பை நிறைய மதிப்பெண் சான்றுகளோடு
காலில் செருப்பில்லாமல்
எங்கெங்கோ
அலைந்து கொண்டிருக்கிறான்

யூத்புல் விகடனில் வெளிவந்த என் கவிதை!!!

http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem290410.asp

No comments:

Post a Comment