Thursday 27 May, 2010

இது எங்கள் கோடை


ஏப்ரல் மாதம் வரை
எங்கள் வீட்டில் நிலவிய வெப்பம்
மே மாதத்தில்
காணாமல் போனது 

வீடெங்கும் அழகு
நாள் எல்லாம் இனிமை
மின்வெட்டு என்பதை
நாங்கள் உணர்வதே இல்லை

அங்கங்கே குவிந்து கிடக்கும்
புத்தகங்களும் உடைகளும்
தரை முழுவதும் பரவிக்கிடக்கும்
தலை முடிகளும்
அழகாக்குகின்றன
எங்கள் வீட்டை

படுக்கைகளில் பரப்பப்பட்ட
சுடிதார்களும் அணிகலன்களும்
இடம் மாற்றி வைக்கப்பட்ட
செல்போன் சார்ஜர்களும்
மூலையில் கிடக்கும்
தொலைக்காட்சி ரிமோட்டும்
ஏனோ எரிச்சல் தருவதில்லை

குளியலறைகளில் புதிய வாசனைகள்
கண்ணாடி முன்பு
விதவிதமான டியூபுகள் கிரீம்கள்
காணமல் போன என் சீப்பு
இதெல்லாம் என் முகத்தில்
உண்டாக்கும் புன்னகைகள்

நாள்முழுதும் அலறும்
செல்போன் பாடல்கள்
நள்ளிரவு வரை
அம்மாவுடன் படுத்துக்கொண்டு
குசுகுசுக்கும் குரல் ஓசைகள்
எனக்கு தாலாட்டு போலவே
கேட்கின்றன

ஹாஸ்டலில் இருக்கும்
உங்கள் மகள்கள்
வீடு வந்தால்
உங்களுக்கும்
கோடை சுகம்தான்.

யூத்புல் விகடனில் வெளிவந்த என் கவிதை
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem270510.asp

Friday 14 May, 2010

இது எங்கள் மதுரை

நதிக்கரை நகரமெல்லாம்
நாகரிகத் தொட்டில் என்று
மதுரையைப் பார்க்காமல்
மனம்போலச் சொன்னது யார்?

துகிலுரிந்த திரௌபதி போல்
மணல் இழந்த வைகை நதிப்
பரப்பெல்லாம் குப்பை
பரந்தோடும் சாக்கடைகள்

பக்தர் குறைதீர்க்க
மலை இறங்கி வரும் எங்கள்
அழகர்க்கும் போர்வெல் நீர்
ஆறாகும் தலையெழுத்து

அன்னை மீனாட்சி
ஆட்சி செய்யும் மாநகரில்
தெருவெங்கும் பிச்சைகேட்கும்
கைக்குழந்தைத் தாய்மார்கள்

புத்தி இழந்தவர்கள்
போதை வசப்பட்டவர்கள்
சித்தம் கலங்கித்
திரிகின்ற தெருக்கள் பல

உணவென்ற பேரில்
விஷம் போடும் உணவகங்கள்
உண்டபின் பிழைக்க
உண்பவர்கள் சொக்கரில்லை

வீடு வந்து சேரும் முன்பு
வீடு பேறு தந்து விட
போட்டியிடும் ஷேர் ஆட்டோ
யம தூதர் வாகனமாம்

சொக்கா, எமைக் காக்க
நீ மீண்டும் வர வேண்டும்
சுந்தரேசா கண் திறப்பாய்
தாமதித்தால் மதுரைக்கு

நகரம் என்ற பேர் போகும்
நரகம் என்ற பேராகும்
கடல் கொள்ளாமலே
கடம்பவனம் மறைந்து விடும்
*

யூத்புல் விகடனில் வந்த கவிதை!!
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem110510.ஆசப்

என்னை எழுதச் சொல்லி ஊக்குவித்த தேனம்மைக்கு நன்றி

Saturday 1 May, 2010

இது எங்கள் பள்ளிக்கூடம்!

எங்கள் வகுப்பறை இருந்த இடத்தில்
கடைகள் கட்டப்பட்டு விட்டன

நாங்கள் ஒளிந்து விளையாடிய
கருவேல மரங்கள் நிறைந்த
விளையாட்டு திடல்
சோதனைச்சாலையாக மாறி விட்டது

நாங்கள் மரத்துக் கபடி விளையாடிய
வேப்ப மரங்கள் வெட்டப்பட்டு
சைக்கிள் ஸ்டாண்ட் ஆகிவிட்டது

எங்கள் பள்ளியில் மதிய உணவு சமைத்த
முனியம்மாவின் மகன்
எங்கள் வகுப்புத்தோழன்
சின்னராசு மட்டும்
பள்ளி வாசலில்
ஐஸ் விற்றுக்கொண்டிருக்கிறான்

மண்டையன் என்றழைக்கப்படும் ராயன்
ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறான்

எங்கள் வகுப்பின்
முதல் மதிப்பெண் பெற்ற சண்முகம்
நாற்பதெட்டு வயதிலும்
கையில் மஞ்சள் பையோடு
பை நிறைய மதிப்பெண் சான்றுகளோடு
காலில் செருப்பில்லாமல்
எங்கெங்கோ
அலைந்து கொண்டிருக்கிறான்

யூத்புல் விகடனில் வெளிவந்த என் கவிதை!!!

http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem290410.asp

Wednesday 14 April, 2010

சில புகைப்படங்கள்

திருப்பதியில் பாசி விற்கும் ரோஸி என்ற நரிக்குறவப் பெண் (அவங்க கூட ஜெயந்தியும் மோனிகாவும்)
நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் ஜெயந்தியும் மோனிகாவும் ஷாப்பிங் செய்த போது

இந்த முகமூடிகளை வீட்டில் மாட்டினால் ஆவிகள் அணுகாது என்பது நேபாளிகளின் நம்பிக்கை
ஒரு படத்தில் நேபாளு கோபாலு என்று வடிவேல் பாடிய இடம்
வாரணாசியில் தினமும் கங்கைக்கரையில் நடைபெறும் ஆரத்தி பார்க்க வேண்டிய நிகழ்வு

Sunday 11 April, 2010

பருவம் மறந்த மரம்

வசந்தத்தில் கூட
இலை உதிர்க்கும்
முட்டாள் மரமே

நிறுத்து இதை.
இது
வண்ணப் பூக்களை
வாரி இறைக்கும்
வசந்த காலம்.

Saturday 10 April, 2010

நிழல் மரமும் வழிப்போக்கனும்

என் பயணம் நீளமானது
கடும் வெயில்
நடை தளர்ந்த போது
மரம் ஒன்று கண்டேன்
கிளிகள் கொஞ்சும் மாமரம்
அழகு அழகு அத்தனை அழகு
நிழலில் அமர்ந்தேன்
சொர்க்கம் கண்டேன்

மரமே, உனக்கு நன்றி
கால்களை நீட்டி
கண்கள் சிறிது அயர்ந்தேன்

மரமும் என்னைக் கண்டு
மகிழ்ந்தது போலத்தான் இருந்தது
சில நிமிட உறக்கம்

விழித்து எழுந்த போது
மரத்தடி முழுதும்
மனிதர்களும் மாடுகளும்.

என் மரத்தடியில்
இவர்களுக்கு என்ன வேலை ?
கோபம் மிகுந்தது

அது ஒரு நொடி மட்டுமே

மறு நொடி என் மனதில்
பயணம் பற்றிய கவலை.
எழுந்தேன் புறப்பட்டேன்.

மரமே, நன்றி.
உன் நிழல் எனது சொந்தமில்லை.
எனக்கு பயணம் தான் முக்கியம்.

மீண்டும் வெயிலில்
பயணம் தொடர்ந்தது.
களைப்படையும் போது

காண்பேன் மற்றொரு மர நிழலை.

மன்னிப்பாய் மரமே,
உன்னை என் சொந்தம் என்று
ஒரு கணம் நினைத்ததற்கு.


Saturday 27 March, 2010

TODAY IS HOLIDAY