Friday 14 May, 2010

இது எங்கள் மதுரை

நதிக்கரை நகரமெல்லாம்
நாகரிகத் தொட்டில் என்று
மதுரையைப் பார்க்காமல்
மனம்போலச் சொன்னது யார்?

துகிலுரிந்த திரௌபதி போல்
மணல் இழந்த வைகை நதிப்
பரப்பெல்லாம் குப்பை
பரந்தோடும் சாக்கடைகள்

பக்தர் குறைதீர்க்க
மலை இறங்கி வரும் எங்கள்
அழகர்க்கும் போர்வெல் நீர்
ஆறாகும் தலையெழுத்து

அன்னை மீனாட்சி
ஆட்சி செய்யும் மாநகரில்
தெருவெங்கும் பிச்சைகேட்கும்
கைக்குழந்தைத் தாய்மார்கள்

புத்தி இழந்தவர்கள்
போதை வசப்பட்டவர்கள்
சித்தம் கலங்கித்
திரிகின்ற தெருக்கள் பல

உணவென்ற பேரில்
விஷம் போடும் உணவகங்கள்
உண்டபின் பிழைக்க
உண்பவர்கள் சொக்கரில்லை

வீடு வந்து சேரும் முன்பு
வீடு பேறு தந்து விட
போட்டியிடும் ஷேர் ஆட்டோ
யம தூதர் வாகனமாம்

சொக்கா, எமைக் காக்க
நீ மீண்டும் வர வேண்டும்
சுந்தரேசா கண் திறப்பாய்
தாமதித்தால் மதுரைக்கு

நகரம் என்ற பேர் போகும்
நரகம் என்ற பேராகும்
கடல் கொள்ளாமலே
கடம்பவனம் மறைந்து விடும்
*

யூத்புல் விகடனில் வந்த கவிதை!!
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem110510.ஆசப்

என்னை எழுதச் சொல்லி ஊக்குவித்த தேனம்மைக்கு நன்றி

1 comment:

  1. பாராட்டுக்கள் ராஜ்.. தொடருங்கள் .. யூத்ஃபுல் கவிஞராகிவிட்டீர்கள்...

    ReplyDelete