Saturday 27 March, 2010

TODAY IS HOLIDAY

Friday 26 March, 2010

என் மகள் எனக்கு நான்கு வயதில் எழுதிய புகார் கடிதம்!

இந்த 'கடிதத்தை' எழுதிய தீபிகாவுக்கு இப்போது வயது இருபது. இதை எழுதும் போது வயது நான்கு. இதைவிட சீக்கிரமாக நீங்கள் உங்கள் அப்பாவுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகள் உங்களுக்கோ கடிதம் எழுதியிருக்கிறர்களா?

இது அம்மா அடித்து விட்டதை பற்றிய புகார் கடிதம்!



 

Thursday 25 March, 2010

சின்னச் சின்ன சந்தேகங்கள்

  1. ரேஷன் அரிசி கிலோ ஒரு ரூபாய்க்கு கிடைக்கும்போது இத்தனை பேர் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்?
  2. ரெஸ்டாரென்ட் வாசலில் பிச்சை எடுக்கும் பெண்கள் எல்லாருக்கும் ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தை எப்படி இருக்கிறது?
  3. நெடுஞ்சாலைகளில் மோட்டல் என்ற பெயரில் இயங்கும் இடங்கள் சுகாதார துறை கண்ணில் படுவதில்லையே, ஏன்? 
  4. ரயில் நிலையங்களில் இருப்பதை விட பேருந்து நிலையங்களில் கடைகள் அதிகமாக இருப்பது பயணிகளின் வசதிக்காகவா அல்லது எதாவது வேண்டுதலா? 
  5. பேருந்து நிலையங்களில் சேரும் குப்பைகள் பயணிகள் வீட்டில் இருந்து அள்ளிக்கொண்டு வந்து போடுவதா அல்லது கடைக்காரர்கள் போடுவதா?
  6. இந்த குப்பைகளால் இடையுறு ஏற்படுவது கடைக்கரர்களுக்கா அல்லது பயணிகளுக்கா?
  7. பேருந்து நிலையங்களில் கட்டண கழிப்பறைகள் எதற்காக அமைக்கப்பட்டுள்ளன? பயணிகள் சுகாதாரத்தை மனதில் கொண்டா? ஆம் என்பவர்கள் இந்த இடங்களில் பத்து நிமிடங்கள் நின்று விட்டு வர விரும்புவார்களா?
  8. அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் நின்றுகொண்டு தான் பயணிக்க வேண்டும் என்பது சட்டமா?
  9. குடிநீர் எல்லா இடங்களிலும் சுத்தமாகவும் இலவசமாகவும் கிடைக்க வழி உண்டா?

Wednesday 24 March, 2010

இரண்டு மூன்று நான்கு

அந்த மூன்று வார்த்தைகளை
நீ சொல்வாய் என்று நானும்
நான் சொல்வேன் என்று நீயும்
நாம் கழித்தது நான்கு ஆண்டுகள்.

ஆனால்
இறுதியில் நாம் சொன்னதென்னவோ
இரண்டு வார்த்தைகள் தான்.

போய் வருகிறேன்.


Tuesday 23 March, 2010

விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2

விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 - இவங்க பண்ற அட்டகாசம் தாங்கவே இல்லை. இந்த பசங்கள் எல்லாம் பள்ளிக்கூடம் போறாங்களா இல்லையா? பாடம் படிக்கவும் விளையாடவும் இவங்களுக்கு நேரம் இருக்கா இல்லையா?
இந்த பிள்ளைகள் பாடுற பாட்டுக்கு இவங்களுக்கு அர்த்தம் தெரியுமா?

வரிசையா உட்கார்ந்து கைதட்டி செயற்கையா சிரிச்சு தலையாட்டும் அம்மாக்களும் அப்பாக்களும் தாத்தா பாட்டிகளும் வேற வேலை வெட்டி பாக்கறதில்லையா? குழந்தைகள் ஜாலியாக பாடி என்ஜாய் பண்ணாமல் வெற்றி தோல்விக்கு சிரிச்சும் அழுதும் தங்கள் மென்மையான மனதை கஷ்டப்படுத்த வேண்டுமா?

இவ்வளவு அழுத்தம் இந்த சின்ன வயசில் இவங்களுக்கு தேவை தானா? எல்லா குழந்தைகளையும் போல இயல்பான இளம்பருவ வாழ்க்கை இந்த குழந்தைகளுக்கு மட்டும் மறுக்கப்பட வேண்டுமா?

ஒவ்வொரு ரவுண்டிலும் வெளியேற்றப்படும் குழந்தைகள் கண் கலங்குவதையும் பெரிய மனுஷத்தனமாக சிரித்து உணர்வுகளை மறைப்பதும் என்னால் ரசிக்க முடியவில்லை. குழந்தைகளை குழந்தைகளாக வாழவும் வளரவும் விடுங்கப்பா.

Monday 22 March, 2010

மோனியின் பத்தொன்பதாவது பிறந்த நாள்

 நேற்றுபோல இருக்கிறது
உன் முதல் பிறந்த நாள் கொண்டாடியது

வலது கட்டை விரலை
வாயில் திணித்துக்கொண்டு
இடது கையால்
கேக்கின் மேல் இருந்த
மெழுகு வர்த்தி சுடரை
எடுக்க முயன்ற
உன் சார்பில்
நான் கேக் வெட்டியது

இன்று உன் வயது
பத்தொன்பது

இந்த பிறந்த நாளில்
எங்களை பார்ப்பதற்காக 
ஆறு மணி நேரம்
பயணம் செய்து
நள்ளிரவில் வந்து சேர்ந்த
உனக்கு

நாங்கள் கொடுத்த
இன்ப அதிர்ச்சி
உனக்காக காத்திருந்த
கேக்கும்
எங்கள் முத்தங்களும்தான்

ஹாஸ்டலில் மகளை
படிக்க அனுப்பிய
எல்லா பெற்றோரும்
கலங்கும் ஒரு நொடி
இந்தக்கணம் தான்

எனது புதிய வலைப்பதிவு

இது புதிய முயற்சி.
தினமும் ஒரு பக்கம் மட்டும் எழுதலாம் என்று எண்ணம்.
முதலில் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நன்றி, தேனம்மை.
உங்கள் யோசனை இது.
---------
குடையும் மழையும்

 உன்மேல் பட்டு விழும்
சின்ன மழைத்துளி
செய்த தவமென்ன?

என் குடைக்கு மட்டும்
சாபமிட்டது யார்?

உள்ளே வா.
விமோசனம் பிறக்கட்டும்
என் குடைக்கும்.
எனக்கும்.